Friday, 24 April 2009

இனப்படுகொலை




இலஙகை போர் உச்சத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.தமிழ் மக்களை விடுதலை புலிகள் கேடயமாக பயன் படுத்துவதாகவும் இதனால் உயிர் பலிகள் அதிகமாகவும் உள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கின்றது. கொத்து குண்டுகள் மூலம் கொத்து கொத்தாக படுகொலை மேற்கொள்வது பற்றி மற்ற நாடுகள் பெரிதாக கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. கண்டனங்கள் மற்றும் போர்நிறுத்த கோரிக்கைகள் வைத்தால் நம் கடமை முடிந்தது என்று உலக நாடுகள் இருக்கின்றன. தெற்கு ஆசியா ஜாம்பவான் என கூறிக்கொள்ளும் இந்திய பேருக்கு அதிகாரிகளை அனுப்பி போர் நிறுத்தம் செய்ய கோருகிறது. இங்கு உள்ள அரசியல்வாதிகள் இந்த பிரச்னையை வைத்து தேர்தல் சடுகுடு விளையாடுகின்றனர்.


போர் நேரத்தில் பின்பற்ற பட வேண்டிய ஜெனீவா ஒப்பந்தம் எல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கிற நிலைமை வந்து விட்டது.அப்பாவி மக்கள் ரத்தம் தோய்ந்த உடம்புடன் கூட்ட கூட்டமாக வெளியேறும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகின்றன. இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்து சமரசம் செய்ய எந்த நாடும் உண்மையான அக்கறை கொண்டு செயல்படாதது கொடுமை. எந்த ஒரு நாட்டிற்கும் எந்த காரணத்திற்க்காகவும் தன் சொந்த மக்களை கொல்ல உரிமை இல்லை. இதற்கும் யூகோஸ்லாவியா , இந்தோனேசியா , மியன்மார் நாட்டில் நடப்பதற்கும் எந்த வித்யாசமும் இல்லை. சொல்ல போனால் இலங்கையில் இருபது வருடமாக நடந்து வரும் இனப் படுகொலை போல் எங்கும் நடந்தது இல்லை. இதற்க்கு ஒரு இணக்கமான தீர்வு காணாமல் நம்ம ஊர் அரசியல் வியாதிகள் தொப்புள் கொடி உறவு , தமிழ் ரத்தம் என்று கூவுகிறார்கள். இங்கே இருக்கும் தமிழன் பிரச்னை தீர்க்க இவர்களால் முடியவில்லை. இவர்கள் எங்கே இலங்கை தமிழனை காபாற்ற போகிறார்கள்.
இலங்கை ஏதோ இன்னொரு நாடு, அதன் இறையாண்மையில் நாம் தலை இடக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால் கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டால் தட்டி கேட்பது நம் தார்மீக உரிமை. எங்கோ இருக்கும் அமெரிக்காவால் உலகின் எந்த மூலையில் நடக்கும் விவகாரத்திலும் புகுந்து தன்கருத்தை நிலை நாட்ட முடிகிறது. இந்தியாவின் காலடியில் இருக்கும் இலங்கை யை கொஞ்சம் கட்டு பாட்டில் வைக்க ஏன் நம்மால் முடியவில்லை ?

Tuesday, 21 April 2009

இந்தியா காலனி கலாச்சாரத்திற்கு கட்டு பட்டு முன்னூறு வருடங்கள் இருந்தது.இப்போது மெதுவாக காலணி கலாச்சாரம் தலை தூக்கு கிறது. இதுவும் மேற்கில் இருந்து வந்ததுதான். புஷ் மீது ஷூ வீசப்பட்ட பின் உலகளாவிய அங்கீகாரம் கிடைத்து விட்டது போல் பலரும் வீச தொடங்கிவிட்டனர். இங்கே சிதம்பரம் மீது காலனி வீசி இந்த நல்ல காரியத்தை தொடங்கி உள்ளனர். அடுத்தது ஒரு எம் பி. மேல் .. சிறப்பாக செயல் படாத அரசியல்வாதி செருப்பால் அடித்தாலாவது ஏதாவது செய்வாரா என்ற எதிர்ப்பார்த்து அடிக்கிறார்கள் போல.
ஏதோ ஒரு ஒட்டு போட்டோம் .. தேர்தலில் யாரோ ஜெயித்தார்கள் நாம் நம் வேலையே பார்போம் என்ற மக்களின் மன நிலை கொஞ்சம் மாறி விட்டது போல் தோன்றுகிறது. தலைவர்களின் வசீகரத்தை பார்த்தோ, கூட்டத்தில் கலந்து பொழுதை போக்கவோ வந்த மக்கள் கூட்டம் தற்போது குறைந்து விட்டதாகவே தெரிகிறது. நாட்டின் அரசியல் தன்னை , தன் குடும்பத்தை நேரடியாக பாதிப்பதாக ஒரு சாரார் உணர்ந்து விட்டனர் .அதனால் தன் ஒரு வோட்டில் உள்ள முக்கியத்துவம் உணர்ந்து அதற்குரிய பிரதிபலனை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர் இந்திய வாக்காளர்கள். இந்த பிரதிபலன் தேர்தல் நேரத்தில் பணமாக , தேர்தல் முடிந்ததும் சொந்த காரியங்களுக்காக என்று பல ரூபத்தில் கிடைக்கிறது.ஒன்றும் கிடைக்க வழி இல்லாதவர்கள் செருப்போடு வெளியே வருகிறார்கள். செருப்படி காரணம் தனிப்பட்ட நபரை பொறுத்து அமைகிறது. புஷ்க்கு இராக் பிரச்னை. சிதம்பரத்திற்கு சீக்கியர் பிரச்சனை. ஆனால் முகம் தெரியாத எம் பிக்கு சாதரண இஸ்கூல் வாத்தியார் அனுப்பிய செருப்பு ராக்கெட் தான் சூப்பெர்.
ஆனால் இதையும் நம் அரசியல் தலைவர்கள் அழகாக சமாளிப்பார்கள். உதாரணத்துக்கு அத்வானி மேல் ஷூ வீசினால் " இதை ராமர் பரதனுக்கு தந்த ராமர் பாதுகையாக எடுத்துக்கொள்கிறேன் " என்பார். கம்யூனிஸ்டுகள் சைனா மேக் செருப்பு என்றால் எவ்ளவ்வு அடி வேண்டுமானாலும் வாங்கி கொள்வார்கள்.
ஆனால் செருப்படி எல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் உறைக்காது என்று வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை வீழ்த்த உள்ள ஒரே ஆயுதம் பட்டன் தான்.தேர்தல் வாய்ப்பு வரும்போதெல்லாம் பட்டன் அழுத்துங்கள். ஆனால் அழுத்தும் முன் யோசித்து அழுத்துங்கள். உங்கள் ஒரு வோட்டு எம் பி யை மட்டும் தேர்ந்து எடுக்கப்போவதில்லை. நாட்டின் தலை விதியை நிர்ணயிக்கும் ஐந்து வருட ஆட்சியை நிர்ணயிக்க போகிறது. எனவே தவறாமல் பட்டன் அழுத்துங்கள். கூடவே எப்போதும் செருப்பு போடுங்கள். பாட்டா ஷோ ரூம் இருக்கவே இருக்கிறது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். யாருக்கு தெரியும். எல்லோரும் செருப்படிக்க ஆரம்பித்தால் ஓட்டு போட பட்டன் வேண்டம் செருப்படியே போதும் என்று சட்டம் வந்தாலும் வரும்.

Sunday, 1 March 2009

இதோ வந்து விட்டது தேர்தல் திருவிழா..மக்களை ஒரு வழி செய்ய கிளம்ப போகிறார்கள் அரசியல்வாதிகள்.ஏப்ரல் மே மாதங்கள் களை கட்ட போகின்றன. இந்த தேர்தலுக்கு சுமார் பத்தாயிரம் கோடி ருபாய் செலவழிக்கப்பட இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது. இதில் அரசின் செலவு சுமார் ரெண்டாயிரம் கோடி மட்டுமே. கடந்த வருடங்களில் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் முதல் போட்டு புதிதாய் பூசணிக்காய் உடைத்து தொழில் தொடங்க வருகிறார்கள் நம் அரசியல் கண்மணிகள். ரெண்டு மாதம் நன்றாக பொழுது போகும்.

ஆனால் புதிதாக ஒன்றும் நடக்க போவது இல்லை. அதே கள் புதிய மொந்தையில். அதே புழுத்த அரசியல்வாதிகள் அதே தொகுதியில். நடை தளர்ந்து போனாலும் தேர்தல் ஆசை விடாது மீண்டும் மனு தாக்கல் செய்வார்கள். மிஞ்சி போனால் அவர்கள் வாரிசுகள் தலை எடுப்பார்கள்.இந்தியாவில் அரசியலில் ஒரு முறை பேர் எடுத்து நின்றுவிட்டால் போதும் .வாழையடி வாழை யாய் அவர்கள் குடும்பம் தழைக்கும். மாற்று கட்சிகள் மீது சேறை வாரி இறைப்பார்கள்..மக்களுக்கும் கொஞ்சம் பணம் இறைப்பார்கள். நஷ்டம் இல்லாத வியாபாரம் இது.

மாணவர்கள் தேர்வுக்கு படிக்கும் நேரம் என்பதை மறந்து ஓயாமல் ஸ்பீக்கர் அலறும். சாதனை பட்டியல் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வரும். போன முறை தேர்தலுக்கு வந்து போன வேட்பாளர் போனால் போகிறது என்று இந்த முறை தொகுதிப்பக்கம் வருவார். கிழிந்த பனியன் போட்ட சாமானிய மனிதரிடம் கை குலுக்குவார்.ஆனால் ரிசல்ட் வந்தால் மறுபடியும் அடுத்த தேர்தல்தான்..
இந்த முறையாவது ஒட்டு போடும் ஜனங்களுக்கு நல்ல சாய்ஸ் கிடைக்குமா என்பதே கேள்வி. சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகர் பணி பார்த்து நொந்து நூலாகி வருத்தத்துடன் விடை பெற்றார். எல்லாம் நம்ம எம் பிக்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்துதான். இந்த ஐந்து வருடத்தில் உருப்படியாக பாரளுமன்றம் பணி செய்தது வெறும் 737 மணி நேரம் தான். வெட்டியாய் வாய் கிழிய கத்தியது 437 மணி நேரம்.சாதனையாக ஏகப்பட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஆனால் அதில் பாதி கூட அனைத்து உறுப்பினர்கள் அமர்ந்து பாஸ் செய்ய வில்லை. எல்லாம் லாபி அரசியல் தான் செய்துள்ளார்கள். இப்போது மீண்டும் பல் இளித்துக்கொண்டு வரபோகிரர்கள்.
இந்தியாவில் எது எதற்கோ விழிப்புணர்வு போராட்டங்கள் நடக்கின்றன.உதரணமாக வருமான வரி கட்டாத நபர்கள் பெயர் இன்டெர் நெட்டில் வெளியிடப்பட்டன. மத்திய அரசு நிறுவனங்களில் ஒரு கேட் கீப்பர் வேலைக்கு கூட அவரை பற்றிய போலீஸ் விசாரணை நடத்தி நல்லவர் என்ற சான்று கொடுத்த பின்னரே வேலை. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மனிதர்கள் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

பிங்க் ஜட்டி போராட்டம் கூட நடக்கிறது. ஆனால் ஓட்டு கேட்டு வரும் மனிதர் பற்றி எந்த உருப்படியான தகவலும் நம்மிடம் இல்லை. கண்ட செய்திகளை தொடர்ந்து விழிப்புணர்வு என்ற பெயரில் மாவரைக்கும் ஊடகங்கள் கிரிமினல் பின் புலம் உள்ள வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து ஒளி பரப்பலாம். வேட்பாளர் சொத்து விவரங்கள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கலாம். போன தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் அவரது சொந்த முயற்சியில் என்ன கிழித்தார் என்று கேட்கலாம். தொகுதியின் அவல நிலைகளை பட்டியல் போடலாம். இந்த மாதிரி நிறைய "லாம்" இருக்கிறது. ஆனால் "லாம்" விட தனிப்பட்ட முறையில் தனக்கு என்ன "லாபம் " என மக்கள் பார்ப்பதால் தான் வெந்தும் வேகாத அரசியல் வாதிகள் சந்துகளில் புகுந்த தப்பி விடுகிறார்கள். அப்படி வலையை போட்டு பிடித்தாலும் ஜாதி அரசியல் மேற்சொன்ன எல்லாவற்றையும் ரப்பர் போட்டு அழித்து விடுகிறது. அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே குலம். மூடைபூச்சி போல் எல்லா க்ரூப் ரத்தமும் அவர்களுக்கு சேரும்.

எனவே இந்த முறையாவது கட்சி பார்த்து , கலர் பார்த்து ஓட்டு போடாமல் , முன்னர் செய்த தவறுக்கு ஒட்டு போடாமல், வேட்பாளர் முகத்தை , முன்னோர்களை, குடும்பத்தை , கொள்கையை, செயல்பாட்டை, படிப்பை, குணத்தை பார்த்து ஓட்டு போடுங்கள்.(ஆனால் ரொம்ப கஷ்ட்டம்பா) . சரி.. அப்படி முடியவில்லை. எல்லாம் அழுகின தக்காளிகள் என்றால் ....சுமாராக அழுகியத்தை பார்த்து போடவும். அதுவும் முடியவில்லை என்றால் ரெண்டு மாசம் அவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து என்ஜாய் பண்ணவும். இருக்கவே இருக்கிறார்கள் பிரணாய் ராயும், ராஜ்தீப் சர் தேசாயும் . டிவி முன் உட்கார்ந்து பொழுதை கழியுங்கள். நம்மை மெதுவாக அரசியல்வாதிகள் கழிப்பார்கள்.

Thursday, 19 February 2009

ஆத்தா நான் ஜெயிலுக்கு போறேன்


சமீபெத்திய பத்திரிக்கை செய்தி.கைதிகளுக்குள் ஒரு தலைவர் தேர்ந்து எடுக்கபடுவார் .. கைதிகள் குறைகள் தீர்க்க அவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.


இதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபோது .. கைதிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து செயல்பட நல்ல தலைமை பண்பு கொண்ட ஒருவர் உதவுவார் .. இதனால் சிறைகளில் பிரச்னைகள் குறையும்..சிறைகள் அமைதி பூங்காவாக திகழும்..



ஓபனிங் நல்லாத்தான் இருக்கு.ஆனா வேலியில் போகிற எதையோ வேட்டியில் விடுகிறார்களோ என்ற பயமும் வருகிறது.


ஏற்கனவே அரசியல் சாக்கடை கல்லூரிகளில் ஓடி இப்போது பள்ளிஅளவிலும் பரவி கொண்டு உள்ளது. பொதுவாக நம் நாட்டில் தலைமை பதவிகள் எல்லாமே போட்டி பொறாமை களுக்கு உட்பட்டவை. எனவே சிறைகளில் பதவிகள் ஏற்படுத்தப்பட்டால் அவை நெகடிவ் ஆன விளைவுகளை ஏற்படுத்துமோ என அஞ்ச தோன்றுகிறது.


நம் நாட்டில் எந்த தேர்தல் அமைதியாக நூறு சதவீதம் நியாயமாக நடக்கிறது.? அதுவும் குற்றம் செய்து தண்டனையை அனுபவித்து திருந்தி வெளியில் வர வேண்டிய கைதிகள் மத்தியில் தேர்தல்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? புதிய சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை அவை தோற்றுவிக்காதா? கட்ட பஞ்சயத்துகள் நடக்காதா?திரும்ப ஜெயிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்கு விக்காதா ?இப்பதே சிக்கன் முட்டை போட்டு நல்ல சாப்பாடும் போடுகிறார்கள்.புழல் போன்ற நவீன சிறைகளில் மேம்படுத்த பட்ட வசதிகள் உள்ளன.



அய்யா அரசியல் பெரியோர்களே, அதிகார மன்னர்களே ஒரு முறைக்கு நூறு முறை யோசித்து உருப்படியாக இதை செய்யுங்கள்.

Wednesday, 4 February 2009

உதச்சது சரியா தப்பா ?



மங்களூர் பப் (அதாங்க நைட் ஓட்டலு) விவகாரத்தில் கருத்து கந்த சாமிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு சாரார் பப் கலாச்சாரம் நமக்கு ஒத்து வராது. ஆக அங்கே ஆட்டம் போட்டவர்களை உதைத்தது சரி என்கிறார்கள்.
ஒரு சாரார் எல்லோருக்கும் எல்லாம் செய்ய சுதந்திரம் உள்ளதால் உதைத்த்து தப்பு என்கிறார்கள் .(முக்கியமாக சமுதாயத்தை பற்றி "ரொம்பவே " கவலை பட்டு கோடிகளில் புரளும் சினிமா ஆசாமிகள் )



முத்தலிக் , மலேகன் எல்லாம் நமக்கு வேண்டாம். பப் பத்தி பேசுவோம்.



"இன்றைய வாலிப, வாலிபி களுக்கு ஓவர் வேலை, ஓவர் டென்ஷன்.. அதனால் பப் ஒரு ரிலாக்ஸ் செய்யும் இடம் ,, மற்றவர்களுக்கு தொல்லை தராமல் நல்லா பழகி நாலு சுவத்திற்குள் கும்மாளம் போட்டால் தப்பு இல்லை ". இது வாதி வக்கீல்.
" எங்க.. நமக்கு பிரச்னை பண்ற ஆளை போட்டு தள்ளினால் சூபெர் ரிலாக்ஸ் என்பதால் கொலை பண்லமா சார்..பப் கலாச்சாரம் கேன்சர் மாதிரி..மூளையை கெடுத்து தப்பு செய்ய தூண்டும் " இது எதிர் தரப்பு வக்கீல்.



யுவர் ஆனர் தீர்ப்பு;


இள வயதில் தண்ணி மற்றும் பலதரப்பட்ட பழக்கங்களை சொல்லி தரும் பப் கலாச்சாரம் தரும் பாதிப்புகள் அதிகம். இந்தியர்களுக்கே உரித்தான தன்னைத்தானே ஒழுங்கு படுத்திக்கொண்டு வாழும் தன்மையை சிதைக்க கூடியது. மேலும் அமெரிக்க இரோப்பிய நாடுகளில் உள்ளது போன்ற யாரையும் சான்று இருக்காத வாழ்க்கை முறை இங்கு இல்லை. நியு கிளியர் குடும்பங்கள் அதிகம் வந்து விட்டாலும் கூட்டு குடும்பம் என்ற அமைப்பு இன்னும் நன்றாக உள்ளதால் மட்டுமே நம் வாழ்க்கை ஒரு அமைப்பில் உள்ளது. இங்கு ஒரு ஆண் தன்னை சுற்றி வாழும் மற்றவர்களுக்கு ஒரு ஒழுக்க முள்ள சகோதரனாய் , கணவனாய் , தகப்பனாய் வாழும் கட்டாயம் உள்ளது. அதே போல் ஒரு பெண் நல்ல சகோதரியாய், மனைவியாய், அம்மாவாய் வாழ வேண்டும். மேலும் நம் குடும்ப முறை முற்றிலும் பெண்களை சார்ந்து உள்ளது. எனவே பெண்களுக்கு பொறுப்பு அதிகமாகவே உள்ளது..ஒழுக்கம் கெட்ட ஆண் அல்லது பெண் சமுதாயத்தில் நல்ல மனிதராக மதிக்க படுவதில்லை. அவர்களால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாது.



("அட என்னப்பா லெக்சர் அடிக்கறே ! " சீக்கிரம் தீர்ப்ப சொல்லு )



இதோ தீர்ப்பு :



" கொஞ்ச நேரம் ஜாலிக்காக சகதியில் புரளுவதில் தப்பில்லை. ஆனால் வழுக்கி விழுந்து காலம் முழுக்க பன்றிகளாக அலைய வேண்டுமா ? பன்றிகளை யாரும் மதிப்பதில்லை. அவர்கள் சமுதாயத்தின் அருவெறுப்பான அடையாளங்கள்."

Wednesday, 21 January 2009

மாற்றம் தேவை



அமெரிக்காவுக்கு மட்டுமல்ல நமக்கும் மாற்றம் தேவை. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஒரு நல்ல அரசியல் மாற்றம் உலகம் முழுதும் உற்சாக எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது. இது ஒபாமா என்ற மனிதரின் மேல் உள்ள நம்பிக்கை என்பதை விட அவர் ஏற்படுத்தி உள்ள எதிர்பார்ப்பே காரணம் எனலாம்.குறிப்பாக பொருளாதார தொய்வு ஏற்படுள்ள இந்த நேரத்தில் ஒரு நல்ல தலைமை நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி நிலைமையை சீர் செய்யும் என்ற எண்ணமே அவருக்கு வெற்றியை தேடி தந்துள்ளது எனலாம்.
இந்தியாவும் தற்போது தேர்தலை எதிநோக்கி உள்ளது. ஒபாமா போல் ஒரு தலைவர் வர மாட்டாரா என மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். இந்தியாவிலும் ஒரு கோடி ஒபமாக்கள் உள்ளனர்.ஆனால் இந்திய சமூக அரசியல் நிலைமை ஒபமாக்கள் வெளிப்பட ஒரு சூழ்நிலையை தர வாய்ப்பில்லை .
ராஜீவ் திடீர் பிரதமரான பொது இதே போல் ஒரு எழுச்சி இருந்தது. இவர் அவர் புதிய் இந்தியாவை படைப்பார் என்ற நம்பிக்கை எழுந்தது . அவரும் கள்ளம் கபடமற்ற வகையில் முதல் அடியை எடுத்து வைத்தார் . ஆனால் நம் நல்ல அரசியல் புண்ணியவான்கள் அவருக்கும் மருந்து வைத்து விட்டனர். விளைவு மக்கள் நம்பிக்கையை இழந்து தேர்தலில்.தோல்வி உற்றார். அதற்கு பின் எந்த ஒரு பிரதமரும் அது போன்ற எழுச்சியை உருவாக்க வில்லை.
தற்போது ராகுலை முன்னிறுத்தி பிரசாரங்கள் மேற்கொள்ளப்டுகின்றன. அவரிடமும் தந்தையின் துடிப்பு உள்ளது. ஆனால் அரசியல் சாக்கடையில் எதிர்நீச்சல் போட்டு இலக்கை அடையும் வலிமை அவருக்கு உள்ளதா என்பது போக போகவே தெரியும்.
நமது பழுத்த புழுத்த அரசியல் வாதிகள் ஜாதீய , ஒட்டு வங்கி, வன்முறை, குடும்ப அரசியல் செய்தே பழக்கப்பட்டவர்கள். இவர்கள் மத்தியில் ஒபமாக்கள் உருவாவது என்பது இமாலய முயற்சி. கூறு கூறாக கூட்டணி கட்சிகள் நம் அரசியல் சூழ்நிலையை கெடுத்து வைத்துள்ள நிலையில் ஒபாமா அல்ல அவரது தாத்தா கூட ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்த நிலை மாறி ஒரு கொபமொவோ , மொகபாவோ வருவார் என்று காத்திருப்போம்.